கூப்பிடு தூரத்தில் வாழ்க்கை
தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே
சொல்
பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?
மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?
மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே
நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்
சாகவில்லை
நீயே அழுகிறாய்
கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை
உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?
மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?
உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா
அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்
உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்
பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?
வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது
கைந்நிறையப் பூக்கள்
இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?
ஓ
வாழ்க்கையோடு
உடன்பாடு
மனிதரோடுதான்
முரண்பாடா?
மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி
பூமியைக்
கைவிடப் பார்ப்பவனே
பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா
காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?
தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன்மீது
நிறுத்திக் கொண்டதா?
பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?
தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.
நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?
உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு
எழுந்திரு
என் பின்னால் வா
அதோ பார்
உயிரில் பாதி
ஒழுகிவிட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன் - ஏன்?
அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே - ஏன்?
பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே ஏன்?
மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?
வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?
வாழ்க்கையின்
நிமி்ஷ நீட்டிப்புக்குத்தான்
தம்பீ
சாவைச்
சாவு தீர்மானிக்கும்
வாழ்க்கையை
நீ தீர்மானி
புரிந்துகொள்
சுடும் வரைக்கும்
நெருப்பு
சுற்றும் வரைக்கும்
பூமி
போராடும் வரைக்கும்
மனிதன்
நீ மனிதன்