உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்

தற்போது பெண்கள் பலர் கோடை விடுமுறைகளில் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த மாதிரியான கலையை, சுயதொழிலை கற்றுக் கொள்வது? என்பதில் பெரிய குழப்பம் நிலவுகிறது. அப்படிப்பட்ட குழப்பம் இனி உங்களுக்கு தேவையே இல்லை.
நீங்கள் விரும்பும் அத்தனை கலையையும் மிக எளிதாக கத்துக்கலாம்.
அட நீங்கள் மட்டும்தானா, உங்கள் செல்லக் குழந்தைகளும் ரொம்ப ஈசியா கத்துக்க முடியும். ஓவியம், வீணாகும் பொருட்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிப்பது, விதவிதமான பொம்மைகள் செய்வது, தஞ்சாவூர் ஓவியம், ஆடை ஓவியம், கிளாஸ் ஓவியம், ஸ்டெயின்ட் கிளாஸ் ஓவியம், கேன்வாஸ் ஓவியம் நிப் ஓவியம், கை எம்பிராய்டரிங், பேப்பரால் பொம்மை செய்வது... என்று பலவகை கலைகளையும் மிகச் சிம்பிளாக கத்துக்கலாம் என்கிறார் சென்னையை சேர்ந்த “சகலகலா வித்தகர்” லக்ஷ்மி பிரியா!
சிறிதளவு அழகுணர்ச்சி இருந்தால் போதும் இதை எளிதாக கத்துக்க முடியும். இதற்கு கல்வித்தகுதி என்று எதுவுமே கிடையாது.
வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என்று வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பெண்களின் வாழ்வில் நாங்கள் சொல்லித் தரும் சுயதொழில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம்.
உதாரணமாக டீ குடிக்க பயன்படும் பிளாஸ்டிக் கப், தீப்பெட்டி, ஐஸ்கிரீம் குச்சி, டப்பா, என்று நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு குப்பையாக கருதுகின்ற இப்பொருட்களில் இருந்து கூட வீட்டை அலங்கரிக்கக் கூடிய கலைப்பொருட்களை உருவாக்க முடியும். இந்த அலங்கார பொருட்கள் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
அதிகமான முதலீடு இல்லாமல் நல்ல லாபத்திற்கு விற்றுவிடலாம். இதற்கு தேவை பொறுமையும், விதவிதமான டிசைன்களை உருவாக்கும் கலைத்திறமையும்தான்.
இப்போதெல்லாம் “டெக்கரேசன்” பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதனை வீட்டில் இருந்தபடியே தயாரித்தால் போதும்! அதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் விற்று விடலாம்.
அதனால் நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம். வீட்டில் நேரம் கிடைக்கும் போதெல்லாம். டி.வி.தொடரில் மூழ்கி விடாமல், அந்த சமயங்களில் பயனுள்ள காரியங்களில் ஈடுபட வேண்டும் என்பதுதான். இதன்மூலம் குடும்ப வருமானமும் அதிகரிக்கும்.
வீட்டு செலவுகளுக்கு நீங்கள் யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டியதும் இல்லை. இப்போதெல்லாம் சுயசம்பாத்தியம் உள்ள பெண்கள்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். கணவரைச் சார்ந்திருக்கும் பெண்களுக்கு அடிமனதில் ஒருவித இறுக்கமும், கலக்கமும் இருப்பதை காண முடிகிறது. பல ஆண்கள் மது பிரியர்களாக இருப்பதால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் தருவதில்லை. இதனால் பல பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் சின்ன சின்ன கைவினைத் தொழிலை கற்றுக் கொண்டாலே போதும். எந்தவித கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழலாம். பெண்கள் தாங்களாகவே வித விதமான கலைப்பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பதை மகளிர் மலரில் வாரம் தோறும் விவரிக்க இருக்கிறோம்.
அதை பார்த்து நீங்கள் எளிதாக கற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறோம். அதில் சந்தேகம் எதுவும் இருந்தால், தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். சந்தேகங்களை தீர்த்து வைக்கிறேன்.
வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு வழிகாட்டுகிறோம். அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது உங்கள் கைகளில்தான் உள்ளது என்கிறார் லக்ஷ்மி பிரியா!

<< சங்கீதத்துக்கும் காதலுக்கும் தொடர்பு அதிகம்  |  முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் >>