சங்கீதத்துக்கும் காதலுக்கும் தொடர்பு அதிகம்
இரு இதயங்கள் உரசிக்கொள்ளும் போது குபீர் என பற்றிக்கொள்கிற தீ தான் காதல்!
ஆண் - பெண்ணின் உணர்வுகளுக்கு உரமூட்டுகிற இந்த காதல் இனிமையான வாழ்க்கைக்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. அதனால்தான் இந்த போட்டி நிறைந்த உலகில் காதலுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது.
இந்த உன்னத காதல் பற்றி பிரபல கர்நாடக இசை பாடகி சுதாரகுநாதனிடம் கேட்கப்பட்டது.
புன்னகையுடன் பதில்களை உதிர்த்தார் அவர்.
சமையலில் எப்படி உப்பும், சர்க்கரையும் அவசியமோ, அதுபோல வாழ்க்கைக்கு அவசியமான அத்தியாவசியமான உணர்வு காதல்.
சாதாரணமாக நாம் பிருந்தாவன பூக்களைப் பார்க்கிறோம். அதை ரசிக்கும்போது ஏற்படும் உணர்வு கூட காதல்தான்.
அதே போல இனிமையான சங்கீதத்தை மெய்மறந்து ரசிக்கிறோம். அந்த உணர்வு கூட காதல்தான்.
காதலானது குடும்பத்தையும், நண்பர்களையும் ஒருங்கிணைக்கிறது. காதலில் தூய்மையும் வெகுளித்தனமும் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான காதல்.
சங்கீதத்துக்கும் காதலுக்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லுங்களேன்?
சங்கீதத்தில் காதல் இருப்பது போல காமமும் இருக்கிறது. விரகதாபத்துடன் எழுதப்பட்ட பாடல்கள் நமது சங்கீதத்தில் நிறையவே உண்டு.
ராகங்களில் நவரசம் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு உணர்வு உண்டு. மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க சங்கீதம் பெருமளவில் துணை புரிகிறது. கவிஞர் பாரதிதாசனின், “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ”என்ற பாடலானது உணர்வை தூண்டுவது போல் இருக்கும்.
காதல் - காமம், பற்றி உங்கள் கருத்து?
“மனதில் எந்தவித சபலமும் இல்லாமல் தூயமனதுடன் ஆண் - பெண் முத்தம் பரிமாறிக் கொள்வதும் அணைத்துக் கொள்வதும் காமம் கிடையாது. அதே சமயத்தில் இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி இருப்பது நலம்.
அந்த இடைவெளி குறைந்து எல்லையை மீறும்போது அது காமமாக மாறிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை ஆபாசம் நிறைந்த பேச்சு, தவறான செய்கைகளை தவிர்க்க வேண்டும். காதல் உணர்வு ரீதியானது. காமம் உடல் ரீதியானது. அதனால் காமத்தை தவிர்க்க ஆண் - பெண் இடையே எல்லைக்கோடு அவசியம். இன்றைய இளம் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அட்வைஸ்?
காதல் விஷயத்தில் எந்த பெண்ணுமே அவசரப்படக்கூடாது. அது எப்போது உங்கள் வாழ்க்கைக்கு வரவேண்டுமோ அப்போது வரவே செய்யும். வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் சந்திக்க வேண்டியவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.
திருமணம் செய்து கொண்டு ஒருவருடன் நன்றாக வாழ முடியும் என்பதை உணரக்கூடிய மனபக்குவம் இருந்தால் தாரளமாகக் காதலிக்கலாம்.
இதை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உங்களைக் காதலியுங்கள். அடுத்து உங்கள் வாழ்க்கையை காதலியுங்கள். ஓ.கே.யா! என்கிறார். சுதாரகுநாதன் மெலிதாகப் புன்னகைத்தப்படியே!
இசை உலகில் தனி முத்திரை பதித்து வரும் சுதாரகுநாதனை பத்மஸ்ரீ, “சங்கீத ரத்னா”, கலைமாமணி, சங்கீத சரஸ்வதி, போன்ற பல விருதுகள் கைகுலுக்கி கவுரவித்து இருக்கின்றன.